இலங்கையிலுள்ள மிக விசாலமான விகாரைகளில் இரண்டாம் இடத்திலுள்ளதாகக் கருதப்படுகின்ற தூபியாக அபயகிரித் தூபி விளங்குகின்றது. வட்டகாமினி அபய அல்லது வலகம்பா (கி.மு. 89-77) என அழைக்கப்படும் மன்னன் இந்த விகாரையை நிர்மாணித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.  சுமார் 200 ஹெக்டெயார் நிலப்பரப்பில் இந்த விகாரை அமைந்துள்ளது.  மகா விகாரையில் மூவாயிரம் பிக்குகள் தங்கியிருந்ததாகவும், அபயகிரி விகாரையில் ஐயாயிரம் பிக்குகள் தங்கியிருந்ததாகவும், ஐந்தாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த பாஹியன் தேரர் அவர்கள் கூறியுள்ளார்.

மகாசேன மன்னனது ஆட்சிக் காலத்தில், அபயகிரி விகாரையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உச்சக் கட்டத்தினை அடைந்திருந்ததுடன், மகாயான பௌத்த தர்ம சம்பிரதாயங்களின் முக்கிய கேந்திர நிலையமாகவும் அபயகிரி விளங்கியது. அபயகிரி விகாரைத் தொகுதியிலுள்ள கட்டிடங்கள் உள்நாட்டு தேவைகளுக்காக மாத்திரமன்றி, சர்வதேச ரீதியாகவும் மிக முக்கியமான கல்வி நிறுவனமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

 

abhayagiriya-stupa-overview-hdr

அபயகிரியின் மிகவும் விரும்பத்தக்க இடங்கள்

×

abhayagiriya-stupa-overview-hdrஅபயகிரி தூபி

கி.மு. முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னன் நிர்மாணித்த அபயகிரி விகாரையை உத்தர மகா வெத்த, அபயகிரி தாதுகோபுரம், அபஹயகர, பஹிரினக, பயாகிரி என பல பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் அபயகிரி விகாரையில் மூன்று அடித்தளத் தட்டுக்கள், நாற்சார் மாடம், கர்ப்பக் கிருகத்தின் உச்சியில் தம்பம், குடை வடிவிலான கற்தட்டு போன்ற அம்சங்கள் நிறைந்திருந்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன் தூபியின் நான்கு பக்கங்களிலும் ஆயக எனப்படும் நான்கு சிறிய சைத்தியக்கள், கற்றள மாடம், யானைச் சிற்பங்கள், மணல் மாடம், சுற்று மதில், கோபுரம் போன்ற அம்சங்களும் காணப்படுகின்றன. தாதுகோபுரத்தின் தென்திசை வாயிலின் இருமருங்கிலும் காணப்படுகின்ற சங்கு, தாமரை, பைரவ உருவங்கள் ஆகியன சிற்பக் கலையைப் பரிணமிக்கும் எடுத்துக் காட்டுகளாகும். இந்த பைரவ உருவங்கள் தொடர்பான சமயக் கிரியைகள் தற்காலத்திலும் இடம் பெறுகின்றன. இவ்விகாரையின் கிழக்குத் திசையிலுள்ள சிறிய சைத்தியவில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அத்துடன் தூபி அமைந்திருந்த மண்டபத்திலிருந்து ஸ்ரீபாத இலச்சினை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தூபி 235 அடி உயரமும், தூபியின் அடித்தளம் 310 அடி விட்டமும் கொண்டது.
 
×

Anuradhapura Abhayagiri 6

இலங்கையில் தடாகங்கள் நிர்மாணிக்கும் கலை மற்றும் அதன் தொழில்நுட்பம் என்பன மிகப் பிரசித்தி பெற்று விளங்குவதுடன், இதற்கு உதாரணமாக குட்டம் பொக்குண எனப்படும் இந்த இரட்டைத் தடாகம் அமைந்துள்ளது. இத் தடாகம் அபயகிரி விகாரை ஆச்சிரமத்தில் வாழ்ந்த பிக்குகளின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இரண்டு தடாகங்களிலும் நீரினுள் இறங்குவதற்காக கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள படிக்கட்டுக்கள் அமைந்துள்ளன. தடாகத்தைச் சுற்றி வர அமைக்கப்பட்டுள்ள நீர்த் தாங்கிகளில் நீர் சேகரிக்கப்பட்டு மகர வாய் போன்ற வாயில் மூலம் சிறிய தடாகத்திற்கு நீர் பாய்ச்சப்படுகின்றது. பின்னர் நிலக்கீழ் குழாய்கள் மூலம் பெரிய தடாகங்களுக்கு நீர் வழங்கப்படுகின்றது. சிறிய தடாகத்தின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள விசேட பகுதியினூடாக தடாகங்களின் அசுத்த நீர் வெளியேற்றப்படுகின்றது. இந்த இரட்டைத் தடாகத்தில் செதுக்கப்பட்டுள்ள ஐந்து தலை நாக சிற்பங்கள் மிகச் சிறந்த கலைப் படைப்பாகக் கருதப்படுகின்றது.

×

Samadhi Buddha-Anuradhapura

அநுராதபுர காலகட்டத்து சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இந்த சமாதி நிலை புத்தர் சிலை ஒரு சிறந்த சிற்பக் கலையம்சம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். புத்த பெருமான் தியானத்தில் ஆழ்ந்து சமாதி நிலையில் இருக்கும் இந்த அற்புதக் காட்சியைச் சிற்பமாக வடித்த கலைஞன் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகின்றது. வீராசனத் தோற்றத்தில் அமர்ந்த வண்ணம் கைகளில் தியான முத்திரையுடன் காட்சியளிக்கும் புத்த பெருமானது இந்தச் சிற்பம் சுண்ணக்கற்களில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்திலுள்ள காவியுடையும், புத்த பெருமானது மேனியும் ஏற்கெனவே வர்ணம் தீட்டப்பட்டு இருந்திருக்கலாம் எனக் கிடைக்கப் பெற்றுள்ள சான்றுகளின் மூலம் தெளிவாகின்றது. உடலோடு ஒட்டினாற் போல காவியுடை அணிந்திருப்பதும், முகத்தில் தெளிவான தோற்றமும் மிக அற்புதமானவை. புத்த பகவானின் அமைதியான தியான நிலை முகத்தில் மாத்திரமன்றி உடலிலும் பரவலாகக் காணப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டில் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது அபயகிரி விகாரைப் பிரதேசத்திலிருந்த போதிமாடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போதிமாடம் அபயகிரி விகாரைக்கு உரியதாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

×

rathnaprasada

பிக்குகளது ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்படும் நிலையமாக பிக்குமாரின் இந்த மண்டப ஆச்சிரமம் இயங்கியுள்ளது. கனிட்டதிஸ்ஸ என்னும் மன்னன் (கி.பி. 772-797) இந்தக் கட்டிடத்தை நிர்மாணித்ததாக வரலாறுகளில் கூறப்படுகின்றது. பின்னர் இரண்டாம் மகிந்த மன்னன் இக்கட்டிடத்தை மேலும் விஸ்தரித்து பல அடுக்கு மாடிகளுடன் நிர்மாணித்து தங்கத்தினாலான புத்தர் சிலையையும் அங்கு பிரதிஷ்டை செய்து வைத்திருந்தான். கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பத்தாம் காசியப்ப (914-923) மன்னனது அபயகிரி கற்சாசனத்தில் ரத்தினப்பிராசாதய என்பது ஒரு சொர்க்கபுரி என எழுதப்பட்டுள்ளது. முதலாம் சேன என்னும் (கி.பி. 833-853) மன்னனது ஆட்சிக் காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வந்த பாண்டியர்கள் இந்தக் கட்டிடத்திலிருந்த தங்கச் சிலையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் எனவும், பின்னர் அச்சிலை மீண்டும் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடை மீது கருங்கல்லினால் நிர்மாணிக்கப்பட்ட தூண் ஒன்று தற்போதும் காணக்கூடியதாக உள்ளது. இந்த மண்டபத்தின் பிரதான நுழைவாயிலின் இருமருங்கிலும் காணப்படுகின்ற காவற்கற்கள் இலங்கையிலுள்ள அனைத்து காவற்கற்களிலும் பார்க்க மிக விசாலமானதும், விசேடமான தோற்றமும் கொண்டதாக அமைந்துள்ளன. இந்த காவற்கற்களுடன் இணைந்த கைபிடிக்கற்கள் மற்றும் காவற்கற்கள் யாவும் மிகச் சிறந்த கலைப்படைப்பாகக் கருதப்படுகின்றன.

×

Moonstones

இலங்கையின் மிகச் சிறந்த சந்திரவட்டக்கற்கள் காணப்படுவது அபயகிரி விகாரைப் பிரதேசத்திலாகும். இங்கு காணப்படுகின்ற 1 ஆம் இலக்க சந்திரவட்டக்கல் இலங்கையிலுள்ள மிகச் சிறந்த கலையம்சங்கள் பொருந்திய சந்திரவட்டக்கல்லாகக் கருதப்படுகின்றது. இங்கு கல்லில் செதுக்கப்பட்டுள்ள மிருக உருவங்கள், மலர்க் கொடிகள் ஆகியவற்றின் இயற்கையான தன்மை மற்றும் தத்ரூபமான சிற்பக் கலை என்பனவற்றை கலைப்படைப்பாளிகள் புகழ்ந்து போற்றுகின்றனர். அபயகிரி விகாரைத் தொகுதியில் மகசென் மாளிகை என அழைக்கப்படுகின்ற பிக்குகளின் பஞ்சாவாச ஆச்சிரமத்தில் இந்த 1 ஆம் இலக்க சந்திரவட்டக்கல்லைக் காணலாம். பல்வேறு அறிஞர்களும் சந்திரவட்டக்கல்லில் உள்ள சிற்பங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். பௌத்த மதம் சார்ந்த கருத்துக்களுடன் சந்திரவட்டக்கல் தொடர்பான விளக்கங்களை பேராசிரியர் செனரத் பரணவிதான அவர்கள் கூறியுள்ளார். பௌத்த மதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பிறவிப் பெருங்கடல் மற்றும் அதனின்று முத்தி பெறல் போன்ற கருத்துக்களை விளக்குவதாக இந்த சந்திரவட்டக்கற்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதென அவர் கூறியுள்ளார். 2 ஆம் இலக்க சந்திரவட்டக்கல்லும் மேற்கூறிய 1 ஆம் இலக்க சந்திரவட்டக்கல் போன்ற மிகச் சிறந்த சந்திரவட்டக்கல் என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தினப்பிராசாதய என்னும் பிக்கு ஆச்சிரமத்திற்கு அருகாமையில் உள்ள குன்றின் மீது காணப்படுகின்ற பிசோ மாளிகை எனப்படும் கட்டிடத்தின் முன்பாக இந்த 2 ஆம் இலக்க சந்திரவட்டக்கல் காணப்படுகின்றது.

×

Eth-Pokuna

அபயகிரியவில் வாழ்ந்த பிக்குகளின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் நிர்மாணிக்கப்பட்ட இந்தத் தடாகம் அபயகிரி விகாரைத் தொகுதியில் காணப்படுகின்ற தடாகங்களுள் மிகப் பெரியதென கூறப்படுகின்றது. 150 மீட்டர் நீளமும், 50 மீட்டர் அகலமும், 10 மீட்டர் ஆழமும் கொண்ட இந்தத் தடாகம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. புராதன வரலாற்று நூல்களில் இதனை 'மாஸ்பொத்த தடாகம்' என்னும் பெயரில் அழைக்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாற்புறமும் கருங்கற்களால் கட்டப்பட்டு மிகச் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தடாகத்தினுள் இறங்குவதற்காக நாற்புறமும் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று சுரங்கப் பாதைகள் வழியாக அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் தடாகத்திற்கு நீர் பாய்ச்சப்படுகின்றது. தற்போதும் வடதிசையாக அமைந்துள்ள இரண்டு நீர்க்குழாய்கள் மூலம் மழைகாலங்களில் நீர் தடாகத்திற்குள் செல்வதை அவதானிக்கலாம். தடாகத்தின் வடதிசையில் அமைந்துள்ள பெரிமியன் குளம் மற்றும் புலன்குளம் ஆகிய வாவிகளிலிருந்து மேற்குறித்த தடாகத்திற்கு நீர் பாய்ச்சப்படுகின்றது. இதன் தென்மேற்குத் திசையில் பிசோகொட்டு எனப்படும் மதகு அமைந்துள்ளது.

×

Asokarama

பன்குழிய என்னும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த அசோகாராமய என்னும் விகாரை தொல்பொருளியல் ரீதியாக பன்குழிய எனவும் அழைக்கப்படுகின்றது. இந்த விகாரையிலிருந்த சிலைக்கூடம், குளியல் தடாகம், தூபி, நீண்ட மண்டபம் போன்ற கட்டிடம், விசேடமான காவற்கற்கள், மிக விசேடமான புத்தர் சிலை என்பன அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சிலைக்கூடத்தின் படிக்கட்டில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் இந்த விகாரை கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்கு உரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட கி.பி. 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகக் கருதப்படும் அமர்ந்த நிலை புத்தர் சிலை சுண்ணக்கற்களில் செதுக்கப்பட்டுள்ளது.

×

vijayarama

விஜயாராமய என்னும் இந்த ஆச்சிரமம் அநுராதபுரத்தில் அபயகிரி ஆச்சிரமத் தொகுதியில் அமைந்துள்ள பௌத்த மத ஆச்சிரமமாகக் கருதப்படுகின்றது. அபயகிரித் தூபியிலிருந்து வடதிசையில் சுமார் 3 கிலோ மீட்டர்கள் தொலைவில் இந்த ஆச்சிரமம் அமைந்துள்ளது. பப்பத்தாராம விகாரை முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆச்சிரம வளவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் இருந்து தூபி, சுமார் 25 கட்டிடச் சிதைவுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுத் தகவல்களின் பிரகாரம் அபயகிரி விகாரைத் தொகுதியின் ஒரு பகுதியாகவே இந்த விஜயாராமய ஆச்சிரமம் அமைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது. இங்கு அமைந்திருந்த தூபியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது பிரக்ஞா பாரமிதா என்னும் சூத்திரம் எழுதப்பட்ட சில செப்புத் தகடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் இங்கு புனித தர்ம தாதுக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்பது தெளிவாகின்றது. விசேடமாக மகாயான பௌத்த தர்மம் இங்கு நிலைபெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்குள்ள சிற்பங்களுள், அவலோகிதேஸ்வர போதிசத்துவர் சிலை, தாரா தேவி சிலை, விமானம் என்பன சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளமை காணப்படுவதுடன், அநுராதபுரக் காலகட்டத்தின் வனாந்தரப் பிரதேசத்திற்குரிய மிக அழகிய ஆச்சிரமமாக இந்த விஜயாராம ஆச்சிரமம் அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

×

Vessagiri

இஸ்ஸரசமனாராமய எனவும் அழைக்கப்படுகின்ற இந்த ஆச்சிரமம் ஒரு குகை ஆச்சிரமமாகும். இந்த ஆச்சிரமத்தை தேவநம்பியதீச மன்னன் பிக்குகளின் நன்மை கருதி நிர்மாணித்துள்ளான். கட்டாரம் எனப்படும் நீர் வழிந்தோடும் முறையில் நுழைவாயில்கள் அமைக்கப்பட்ட 23 கற்குகைகள் இதற்கென நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்குகைகளினுள் பிராஹ்மி முறையிலான எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. விசேடமாக அநுராதபுரக் காலகட்டத்தின் சித்திரக் கலைகள் அடங்கிய ஓவியங்களும் காணப்படுகின்றன.