காலி
per person
இலங்கையின் தென்மேற்குக் கரையோரப் பிரதேசத்தில் காலி என்னும் நகரம் அமைந்துள்ளது. மரபுரிமைப் பிரதேசமாகிய இந்த நகரத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தொல்பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில் வரலாற்றுக் காலகட்டத்தினைப் பிரதிபலிக்கும் மரபுரிமைகள் தொடர்பான தொல்பொருளியல் பிரதேசங்களும், அந்நியர் ஆட்சிக் காலத்தினைப் பிரதிபலிக்கும் தொல்பொருளியல் பிரதேசங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசேடமாக காலித் துறைமுகத்தில் கிறிஸ்துவுக்குப் பின்னரான ஆரம்ப காலகட்டத்திலிருந்தே மேலைத்தேய, கீழைத்தேய நாடுகளுக்கிடையிலான வர்த்தகத் தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை பற்றி வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. காலித் துறைமுகம் ஒரு வர்த்தகத் துறைமுகமாக இயங்கி வந்த காரணத்தினால் கி.பி. 139 ஆம் ஆண்டில் டொலம் என்பவரால் வரையப்பட்ட வரைபடம் ஒன்றில் காலி நகரை விசேடமாகக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
1588 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயரால் காலிக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்தக் கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர். இவற்றின் பிரதிபலனாக தென் மாகாண மக்களின் வாழ்வு முறைகளில் ஐரோப்பிய கலாச்சாரத்தின் தாக்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. கட்டிடக் கலை, கல்வி, கலைத் துறை, உடையலங்காரங்கள், சமயம் போன்ற பல விடயங்களிலும் ஐரோப்பிய கலாச்சார முறைகள் ஊடுருவின. காலியின் மிக முக்கிய கேந்திர நிலையமாக விளங்கிய காலிக் கோட்டையினுள் அமைந்துள்ள நகரம் இன்றும் மிக அலங்காரமாகக் காட்சியளிக்கின்றது. 1996 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனத்தினால் காலி நகரை உலக மரபுரிமைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
மத்திய கலாசார நிதியத்தினால் பழைய காலித் துறைமுகத்தை மையமாக வைத்து கடல் சார்ந்த தொல்பொருளியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள காலி சமுத்திர நூதனசாலையில் இந்த மரபுரமைப் பிரதேசத்தில் காணப்படும் துறைமுக உரிமைகள், கலாச்சார உரிமைகள் என்பவற்றின் தொல்பொருளியல் சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இப்பிரதேசத்திலுள்ள மரபுரமை சார்ந்த இடங்களின் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய கலாசார நிதியம் இயங்கி வருகின்றது.