இப்பன்கட்டுவ
per person
குருநாகல் – திருகோணமலை பிரதான பாதையில் சீகிரியாவை அண்மித்ததாக இந்த இப்பன்கட்டுவ என்னும் பிரதேசம் அமைந்துள்ளது.
இலங்கையிலேயே மிகப் பழைமையான ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்திற்குரிய மயானபூமிகள் அமைந்துள்ள பிரதேசமாக இது கருதப்படுகின்றது. சுமார் 13 ஹெக்டெயார் நிலப்பரப்பில் அமைந்திருந்த மயானபூமியில் மெகாலிதிக் சம்பிரதாயத்தை எடுத்துக் காட்டுகின்ற கற்தட்டுக்களால் நிர்மாணிக்கப்பட்ட மயானங்கள் காணப்படுகின்றன. 1970ஆம் ஆண்டில் முன்னாள் தொல்பொருளியல் ஆணையாளர் கலாநிதி. ராஜா த சில்வா அவர்களின் தலைமையில் இங்கு முதன்முதலாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் 1988ஆம் ஆண்டிலும், 1990 ஆம் ஆண்டிலும் மத்திய கலாசார நிதியத்தின் கீழ் இயங்கும் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவனத்தினாலும், ஜெர்மன் தேசத்து காவா நிறுவனத்தினாலும் (Commission tur Allgemeine Vergleichende Archaeologie) உள்நாட்டு, வெளிநாட்டு தொல்பொருளியலாளர்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் மூலம் 21 மயானச் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கிருந்து பெறப்பட்ட கரி மற்றும் ரேடியோ காபன் ஆகிய திண்மச் சான்றுகளை ஆய்வு செய்தபோது இவை கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கு உரியவை எனக் கணிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் 2015 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிறுவனத்தினால் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 21 மயானச் சமாதிகளுக்கு அண்மையில் மேலும் 10×10 அளவிலான பிரதேசத்தில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது மேலும் 47 மயானச் சமாதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் 26 மயானச் சமாதிகள் இறந்தவர்களின் அஸ்தி அடங்கிய தாழியடக்க முறையிலான மயானங்களாகக் காணப்படுகின்றன.
இந்த மயானங்கள் வட்ட வடிவிலும், செவ்வக வடிவிலும் அமைந்துள்ளதுடன், கற்தட்டுக்களால் நிர்மாணிக்கப்பட்டும், கற்தட்டுக்களால் மூடப்பட்டும் உள்ளன. இதனுள் இறந்தவரின் அஸ்தி மற்றும் அவர் பயன்படுத்திய ஆபரணங்கள் என்பன அடங்கிய சிவப்பு மற்றும் கருமை நிறத் தாழிகள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான 2 தொடக்கம் 10 வரையான தாழிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வுகளின் போது செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களாலான பொருட்களும் முத்துக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள 47 மயானச் சமாதிகளுள் 21 மயானங்களிலும் இறந்தவர்களின் அஸ்தி அடங்கியுள்ளதுடன், இவை தாழியடக்க முறை மயானம் எனக் கூறப்படுகின்றது. இந்த தாழிகளுள் சில பெரிய அளவிலும், அவற்றினுள் சிறிய அளவிலான தாழிகள் வைக்கப்பட்டும் காணப்படுகின்றன.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்ப வரலாற்றுக் கால மயானபூமிகளுள் இப்பன்கட்டுவ மயானமே மிகப் பெரிய மயான பூமியாகக் கருதப்படுகின்றது. தாழியடக்க முறையிலான மயானங்கள் அடங்கிய இந்த மயான பூமி 700 மீட்டர் x 400 மீட்டர் அளவிலான நிலப்பரப்பை உள்ளடக்கியுள்ளது. இந்த மயான பூமியருகே இதனுடன் தொடர்புடையதாகக் கருதப்படக்கூடிய கற்காலத்திற்குரிய பொல்வத்த எனப்படும் மனிதக் குடியிருப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இவை தொடர்பான பல சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.