மத்திய கலாசார நிதியத்தின் கீழ் இயங்கும் சீகிரியா நூதனசாலை தெற்காசியாவில் உள்ள மிகச் சிறந்த நூதனசாலையாகக் கருதப்படுகின்றது. இது சீகிரியாவின் கலாச்சார மரபுரிமைகள், தொல்பொருளியல் சிறப்புக்கள் மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்கள் மிகுந்த அரும்பொருட்கள் அடங்கிய நூதனசாலையாகும். யுனெஸ்கா நிறுவனத்தினால் மரபுரிமைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சீகிரியாவில் மூன்று தசாப்த காலமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகள் இந்த நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இயற்கையுடன் இணைந்த மிக அழகிய தோற்றத்தில் இந்த நூதனசாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை அழகுடன் விருட்சங்கள் மற்றும் நீரோடைகள் ஆகியவற்றினால் சூழப்பட்ட பிரதேசத்தில் இந்த நூதனசாலை மிக நேர்த்தியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நூதனசாலையின் மாடிகளுக்குச் செல்லும் படிக்கட்டுக்கள் சீகிரியாக் குன்றின் மேல் மாடங்களுக்குச் செல்வதற்கான படிக்கட்டுக்களை ஞாபகமூட்டுவதாக அமைந்துள்ளன.

இந்த நூதனசாலையின் நுழைவாயில் ஒரு சுரங்க வாயிலைப் போன்ற அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை சீகிரியாக் கோட்டையின் நுழைவாயிலை ஞாபகமூட்டுவதாக உள்ளன. அகழ்வுகளிலிருந்து பெறப்பட்ட மனித எலும்புக்கூடு, ஆபரணங்கள், பல்வேறு உபகரணங்கள், சிலைகள் போன்ற பல அரும்பொருட்கள் இந்த நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அரும்பொருட்கள் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள், படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் பார்வையாளர்களுக்கு மிக இலகுவாக இங்குள்ள அரும்பொருட்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரும்பொருட்களுள் இரும்பு உருக்குவதற்கான இயந்திரம் மற்றும் ஊதா நிற மாணிக்கக்கல் பதித்த தங்கத்தினாலான காதணி என்பன மிக முக்கியமான அரும்பொருட்களாகும்.

நூதனசாலையின் காட்சிக்கூடங்கள்

நூதனசாலையின் கீழ்த் தளத்தில் உள்ள காட்சிக்கூடங்கள் ஒவ்வொரு துறைக்கும் உரிய வகையிலும்  ஒவ்வொரு கருப்பொருளுக்கும் ஏற்ற வகையிலும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கேலரி
01
: கற்கால வரலாற்றுக் காலம் மற்றும் ஆரம்ப வரலாற்றுக் காலம் ஆகியவற்றின் பரிணாமங்கள்: கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக் காலம் தொடங்கி கி.பி. 1 ஆம் நூற்றாண்டுக் காலம் வரை சீகிரியாவிலும், அதனை அண்மித்த பிரதேசங்களிலும் காணப்பட்ட பரிணாம வளர்ச்சி புவியியல் ரீதியாகவும், இரும்பு உற்பத்தி போன்ற தொழில்நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கேலரி
02
: ஆரம்ப காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும்: சீகிரியாவில் பௌத்த விகாராச்சிரமங்கள் பெருமளவில் இருந்துள்ளன. இவை கி.மு. 3 ஆம், கி.பி. 1 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திற்குரியவை எனக் கருதப்படுகின்றது.
கேலரி
03
: ஆட்சி நகரமும், சீகிரியாவின் பெறுமதி வாய்ந்த காலகட்டமும்: இந்தக் காட்சிக்கூடத்தில் காசியப்ப மன்னனது வாழ்க்கை வரலாறு, 5 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட நகர நிர்மாணம், பூங்கா நிர்மாணம் ஆகிய விடயங்கள் அடங்கியுள்ளன. கி.பி. 477 - 495 ஆம் ஆண்டுகள் சீகிரியாவின் பெறுமதி வாய்ந்த காலகட்டமாகக் கருதப்படுவதுடன், சீகிரியாவை ஆட்சி செய்த காசியப்ப மன்னனது நகர நிர்மாணத் திட்டம், கட்டிடக் கலைச் சிறப்பம்சங்கள் ஆகியன பாராட்டப்படக்கூடிய விடயங்களாகக் கருதப்படுகின்றன. இக்காட்சிக்கூடத்தில் சீகிரியாக் கோட்டை, நீர் அகழிகள், காவலரண்கள், நுழைவாயில்கள், நீர்ப்பாசன முறைகள், பூங்கா, பளிங்குக் கற்பாறை, சிங்க படிக்கட்டு ஆகிய பல அம்சங்கள் தொடர்பான அரும்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கேலரி
04
: ஓவியங்கள், காவியப் படைப்புக்கள், கட்டிடக் கலைகள்: இக்காட்சிக்கூடத்தில் சீகிரியா ஓவியங்கள், கிறுக்கல் கவிதைகள் ஆகியவற்றின் களிமண்ணாலான மாதிரி உருவமைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீகிரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கற்பாறைப் பூங்காவின் கி.பி. 7 ஆம், 8 ஆம், 10 ஆம் நூற்றாண்டிற்குரிய ஓவியங்களின் மாதிரி உருவமைப்புக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி. 6 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் இங்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் கிறுக்கல் கவிதைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கேலரி
05
: அரச வாழ்வு, விகாராச்சிரம நடவடிக்கைகள், வெளிநாட்டு வர்த்தகம்: அரச வாழ்க்கை, விகாராச்சிரம நடவடிக்கைகள், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற விடயங்கள் உள்ளடங்கிய காட்சிக்கூடமாக இது அமைக்கப்பட்டுள்ளது. சீகிரியா அகழ்வுகளிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கி.பி. 5 - 10 நூற்றாண்டுகளுக்குரிய மட்பாண்டங்கள், நாணயங்கள், அரச வாழ்வு தொடர்பான பொருட்கள் என்பன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், ரோம தேசம் ஆகிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட பீங்கான் பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள் ஆகியனவும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கேலரி
06
: ஒளிந்திருக்கும் நாடுகள்' - சீகிரியாவின் வரலாறும், தொல்பொருளியலும்: இங்கு காணப்படும் 'ஒளிந்திருக்கும் நாடுகள்' என்னும் கவிதையில் கி.பி. 800 - 2000 ஆம் வருடங்களில் இருந்த சீகிரியாவின் வரலாறுகள் பற்றியும், பரந்தளவில் மேற்கொள்ளப்பட்ட எதிர்கால ஆய்வுகள் பற்றியும் இக்கவிதைகளில் எழுதப்பட்டுள்ளன.
ஓவியங்கள் காட்சிக்கூடம் : சீகிரியாவின் கற்குகைகளில் காணப்படும் சுவரோவியங்களின் மாதிரி உருவமைப்புக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

திறக்கப்படும் நேரங்கள்

தினந்தோறும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை.

பார்வையாளர்களுக்கான செயற்பாடுகள்

  • கலாசார நிகழ்ச்சிகள்

இலங்கையின் பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் மாதாந்த நிகழ்ச்சிகள் இந்த நூதனசாலையில் இடம் பெறுகின்றன. சீகிரியாவின் திறந்தவெளி கலையரங்கத்தில் நாடகங்கள், நடனங்கள் என்பன மேடையேற்றப்படுவதுடன், இவற்றை சுற்றுலாப் பயணிகளும் அப்பிரதேச மக்களும் கண்டுகளிப்பர்.

  • சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள்
  • தற்காலிகக் கண்காட்சிகள்

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள்

  • சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் நிலையம்
  • கழிப்பிட வசதிகள்
  • நூதனசாலையில் தகவல் வழங்கும் அலுவலர்கள்
  • புத்தகங்கள் மற்றும் ஞாபகார்த்தச் சின்னங்களின் விற்பனை

நூதனசாலை நுழைவுக் கட்டணங்கள்

சீகிரியாக் குன்றிலுள்ள கோட்டையைப் பார்வையிடுவதற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் நுழைவுச் சீட்டுடன் இந்த நூதனசாலையைப் பார்வையிடுவதற்கான நுழைவுச் சீட்டும் வழங்கப்படும்.

வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கான நுழைவுக் கட்டணம்

வளர்ந்தோர்களுக்கு சிறியோர்களுக்கு நூதனசாலைக்கு மாத்திரமானது
30 அமெரிக்க டொலர்கள் 12.5 அமெரிக்க டொலர்கள் 5 அமெரிக்க டொலர்கள்

புகைப்பட கேலரி