தற்போதைய நிர்வாக முறையின் பிரகாரம் ஊவா மாகாணத்தின் கீழ் இயங்கி வரும் மொணறாகலை மாவட்டம், புராதன காலத்தில் ரோஹண தேச இராச்சியத்தில் முக்கிய இடம் வகித்த பிரதேசமாக அமைந்திருந்தது என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் முக்கியமான தொல்பொருளியல் சான்றுகள் அடங்கிய பிரதேசமாகக் கருதப்படுவதாக தொல்பொருளியலாளர்கள் கூறுகின்றனர். நில்கல என்னும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது, மனித மண்டையோடு, நாய் அல்லது நரியின் உடற்பாகம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்றின் மிக முக்கிய இடம் வகிக்கும் கதிர்காமம், யுதகனாவ, புத்தள, மாளிகாவில, கலபெத்த, ரந்தெனிவெல ஆகிய பிரதேசங்கள் இந்த மரபுரிமைப் பிரதேசத்தினுள் அடங்கியுள்ளன. புத்தள, தெமட்டமல் விகாரை, யுதகனாவ, அதிமலை ஆகிய பிரதேசங்கள் துட்டகைமுனு, சத்தாதிஸ்ஸ ஆகிய மன்னர்களுடைய வரலாற்றுடன் தொடர்புடைய பிரதேசங்களாகும். சத்தாதிஸ்ஸ மன்னன் ஊவா மாகாணத்தில் ஒரு லட்சம் வயல்நிலங்களில் விளைச்சல் மேற்கொள்வதற்கு முன்னின்று உழைத்ததாகவும், அதன் காரணமாக இப்பிரதேசம் தற்போதும், வெல்லஸ்ஸ என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அநுராதபுர காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் காரணமாக, வலகம்பா மன்னன் தனது பாதுகாப்புக் கருதியும், யுத்த சேனையை ஒழுங்குபடுத்துவதற்கு ரோஹண தேசத்து ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பினபை; பெற்றுக் கொள்ளும் நோக்கமாகவும் மொணறாகலை பிரதேசத்தில் மறைந்து வாழ்ந்தான் என வரலாறுகளில் கூறப்பட்டுள்ளன. கண்டிய இராச்சிய காலகட்டத்தின் போதும் சில மன்னர்களின் வரலாற்றுச் சம்பவங்கள் மொணறாகலை மாவட்டத்துடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகின்றது. அக்கால கட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட விகாரைகள், டெம்பிட்ட விகாரைகள், ஓவியங்கள் ஆகியனவும் இந்த மாவட்டத்தில் பரவலாகக் காணப்படுகின்றன.  மேலைத்தேயத்தவர்களின் ஆக்கிரகமிப்பின் போதும், அவர்களுக்கு எதிராகப் போராடிய ஊவா மாகாண மக்களின் பங்களிப்பு தொடர்பாக வம்சக் கதைகளிலும், வரலாறுகளிலும், கடலாதெனிய மற்றும் நாத தேவாலயத்தில் இருந்த கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாம் ராஜசிங்க மன்னனின் ஆட்சிக் காலத்தில் வெள்ளவாயா, ரந்தெனிய வயற்காட்டில் இடம் பெற்ற சமரின் போது போர்த்துக்கேயரைத் தோற்கடித்துள்ளதுடன், போர்த்துக்கேயத் தலைவனாகிய கொன்ஸ்டன்தீனு த சா என்பவன் உயிரழந்தமையும் குறிப்பிடத்தக்கது. 1818 ஆம் ஆண்டில் கண்டியப் புரட்சியின் போது மொணறாகலை மாவட்டத்தினரும், அதனைச் சார்ந்த ஏனைய பிரதேசத்தவர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். அன்றைய புரட்சியில் பங்கேற்ற வீர கெப்பெட்டிப்பொல, பூட்டாவே ரட்டே ரால, கொஹுகும்புரே ரட்டே ரால ஆகியோர் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

2013 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தினால் இப்பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை சார்ந்த இடங்கள் தொடர்பாக முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், புதுருவகல பிரதேசத்தை மையமாக வைத்து பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.