இலங்கையின் ஈரவலயப் பிரதேசங்களுள் மலையும், மலை சார்ந்த பிரதேசங்களும் அடங்கிய மலைப்பாங்கான பிரதேசமாக கேகாலை மாவட்டத்தைக் குறிப்பிடலாம். விசேடமாக இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆதி மனிதர்கள் தொடர்பான பல சான்றுகள் இந்த மாவட்டத்திலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இற்றைக்கு 27,000 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தொடர்பான சான்றுகள் கித்துல்கல பெலிலென கற்குகை, மானயிம்கம பெலிலென கற்குகை, அளுலென கற்குகை ஆகிய இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இப்பிரதேசத்தில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படும் பௌத்த விகாரை ஆச்சிரமங்கள் தொடர்பான சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படுகின்ற ஆச்சிரமங்கள் சூழலுக்கு ஏற்றவாறு யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையாவாறு அமைக்கப்பட்டு, கற்குகை விகாரைகள், டெம்பிட்ட விகாரைகள் எனப் பல்வேறு விகாரைகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கற்குகை விகாரைகளில் இருந்து புராதன பிராஹ்மி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விகாரை ஆச்சிரமங்களில் பெரும்பாலும் கண்டிய காலகட்டத்தைச் சேர்ந்த சம்பிரதாயங்களின் அடிப்படையில் வரைந்த சுவரோவியங்களும் காணப்படுகின்றன.

2016 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தினால் இப்பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை சார்ந்த இடங்கள் தொடர்பாக முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,  ஆரம்ப வரலாற்றுக் கால மனிதர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடும் கற்குகைகள் மற்றும் சுவரோவியங்கள் அமைந்துள்ள கற்குகைகள் என்பவற்றின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

kegalle ritigala