தம்புள்ள
per person
இலங்கையின் கலாச்சார முக்கோணத் திட்டத்தின் கீழ் அமைந்துள்ள மரபுரிமைப் பிரதேசமாக தம்புள்ளைப் பிரதேசம் விளங்குகின்றது. இப்பிரதேசத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள ஐந்து கற்குகைகள் உட்பட்ட குகைத் தொகுதி, அவற்றுள் காணப்படுகின்ற சுவரோவியங்கள், சிற்பங்கள் ஆகியன இங்கு காணப்படுகின்ற விசேட தொல்பொருளியல் சான்றுகளாகும். கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்குரிய பிராஹ்மி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள், கி.பி. 18 ஆம் நூற்றாண்டிற்குரிய சுவரோவியங்கள் என்பன இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக வாழ்ந்த மானிடர்களின் சான்றுகளாக எஞ்சியுள்ளன. 1991 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனத்தினரால் இப்பிரதேசம் உலக உரிமைகள் பட்டியலில் சேர்த்து உலக உரிமைப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. 1982 ஆம் ஆண்டு தொடக்கம் 1998 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பிரதேசத்திலுள்ள சுவரோவியங்களின் பேணிப் பாதுகாத்தல் நடவடிக்கைகள் மத்திய கலாசார நிதியத்தின் தம்புள்ளை கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசேடமாக இலங்கையிலுள்ள சுவரோவியங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆராய்ச்சி நிலையமாகவும், சுவரோவியங்களைப் பேணிப் பாதுகாக்கும் தலைமை நிலையமாகவும் தம்புள்ளை கருத்திட்டம் இயங்கி வருகின்றது. அத்துடன் இலங்கையில் காணப்படும் சுவரோவியங்கள் தொடர்பான ஒரேயொரு நூதனசாலையையும் நடாத்தி வருகின்றது. இக்கருத்திட்டத்தின் மூலம் இப்பிரதேசத்தில் காணப்படும் கற்குகை விகாரைகள் மற்றும் சுவரோவியங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.