யாழ்ப்பாணம்
per person
குடாநாடாகவும், தீபகற்பமாகவும் விளங்குகின்ற யாழ்ப்பாண மாவட்டம், இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தினுள் மேற்கொள்ளப்பட்டுள்ள தொல்பொருளியல் ஆய்வுகளின் அடிப்படையில் ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்திலும், வரலாற்றுக் காலகட்டத்திலும் வாழ்ந்த ஆதி மனிதர்கள் தொடர்பான பல சான்றுகள் கண்டெடுக்கப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. எழுத்து மூலமான சான்றுகளின் அடிப்படையில் புத்த பெருமானது இரண்டாவது இலங்கை விஜயம் மேற்கொள்ளப்பட்டமை யாழ்ப்பாண வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வரலாற்று ரீதியான மற்றுமொரு சம்பவமாகிய ஜம்புகோளப்பட்டினம் அல்லது தம்பகொலபட்டுன என அழைக்கப்படுகின்ற துறைமுகத்தின் வழியாக சங்கமித்தை பிக்குணி 18 வகையான தனது பரிவாரங்களுடன் வெள்ளரசு மரக்கிளையை எடுத்து வந்துள்ளதாக மகாவம்ச நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவநம்பியதீசன் மன்னனது ஆட்சிக் காலத்தின் போது, இலங்கைக்கு பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய அசோக மன்னனது அரிட்ட என்பவர் உட்பட்ட மௌர்ய அரச தூதர்கள் இலங்கைக்கு வருகை தந்து மீண்டும் நாடு திரும்பியதும் இந்த ஜம்புகோளப்பட்டினத் துறைமுகத்தினூடாகவே என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் பாஹியன் என்னும் பிக்கு (கி.பி. 411-413) இலங்கைக்கு வருகை தந்ததும் இதே துறைமுகத்தினூடாக என்பதும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள துறைமுகங்களுள் ஜம்புகோளப்பட்டினத் துறைமுகம் தவிர, ஊறதொட்ட எனப்படும் ஊர்காவற்றுறை துறைமுகமும் பிரசித்தி பெற்றதாகும்.
13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆக்கிரமிப்பின் போது, சிங்கள மன்னர்கள் வலிவிழந்து காணப்பட்டமையால் வட மாகாணத்தில் பாண்டியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க மாக என்னும் மன்னனின் ஆக்கிரமிப்புக் காரணமாக அவர்களின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றது. மாக என்னும் மன்னன் 21 வருடங்கள் ஆட்சி செய்தான். 1245 ஆம் ஆண்டில் சந்திரபானு என்னும் மன்னன் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டை 18 வருடங்கள் ஆண்டு வந்தான். பின்னர் கி.பி. 993-1070 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 77 ஆண்டுகள் சோழ மன்னர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டனர்.
போர்த்துக்கேயர் இலங்கையின் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த அதேவேளை, யாழ்ப்பாணத்தில் 1579 ஆம் ஆண்டுகளில் மெகராசசேகரன் எனப்படும் சங்கிலியன் என்னும் மன்னன் ஆட்சி செய்தான். போர்த்துக்கேயர் சங்கிலியனுக்கு எதிராக போர் புரியத் தலைப்பட்டனர். 1618 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயர் தமது படையினருடன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினார்கள். பின்னர் 1658 ஆம் ஆண்டுகளில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் போது கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசங்கள் ஊடாக அவர்களது ஆதிக்கம் மேலோங்கியது. 1795 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள், ஆங்கிலேயர்கள் யாழ்ப்பாணக் கோட்டையைத் தமது நிர்வாகக் கடமைகளுக்காகப் பயன்படுத்தினார்கள்.
இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய பௌத்த, இந்து மத மரபுரிமைப் பிரதேசங்களும், அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாகிய மரபுரிமைப் பிரதேசங்களும் பரவலாகக் காணப்படுகின்றன. விசேடமாக யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த ஏராளமான தீவுப்பகுதிகள் காணப்படுவதுடன், அங்கு காணப்படும் தொல்பொருளியல் மரபுரிமைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
முப்பது வருட காலமாக இனப்பிரச்சினை காரணமாக ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்கு உட்பட்ட தொல்பொருளியல் மரபுரிமைப் பிரதேசங்களை மத்திய கலாசார நிதியத்தினால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், அவற்றை மக்கள் கண்டு களிக்கும் வகையில் மரபுரிமை முகாமைத்துவ நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கோட்டையை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறுகிய தகவல்
மாகாணம் | வட மாகாணம் |
|
|
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
|
|
காவல் நிலையம் | யாழ்ப்பாணம் டெல்ஃப்ட் |
|
|
மருத்துவமனை | யாழ்ப்பாணம் |
|
|
தொடர்பு எண் | +94 212 213 711 |