ரிட்டிகல
per person
இலங்கையின் வெப்ப வலயத்தினுள் அமைந்துள்ள அழகிய இயற்கைச் சூழலில் இந்த ரிட்டிகல எனப்படும் தொல்பொருளியல் ஆய்வுப் பிரதேசம் அமைந்துள்ளது. சீகிரியாவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலைச்சாரலில் 750 மீட்டர் உயரமான மலைக் குன்று ரிட்டிகல என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசம் பல வகையான உயிரினங்களும் வாழ்கின்ற, பல காலநிலைகளையும் கொண்டுள்ள ஒரு சிறந்த இயற்கை வளம் மிகுந்த பிரதேசமாகும். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இதமான இந்த இயற்கைச் சூழலில் தியானத்தில் ஈடுபடும் ஏராளமான பிக்குகள் வாழ்ந்த ஆச்சிரமத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக இது தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் எனவும் கருதப்படுகின்றது.
தற்போது இங்கு காணப்படும் தொல்பொருளியற் சான்றுகளாக, முதலாம் சேன மன்னன் (கி.பி. 831-851) முழுமையானதொரு ஆச்சிரமத் தொகுதியை நிர்மாணித்தமை தொடர்பான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியல் ஆய்வுகளின் பிரகாரம், தியானத்தில் ஈடுபடும் பிக்குகள் வாழ்ந்த பதாநகர் ஆச்சிரமங்கள், ஜந்தாகர எனப்படும் சுடுநீர்க் குளியலறை, ஓய்வு மாடங்கள், கழிவறைகள், தடாகங்கள் போன்ற விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது இவ்வாறான கட்டிடக் கலைகள் சார்ந்த தொல்பொருளியல் சான்றுகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. விசேடமாக வனாந்தரப் பகுதியினூடாக அமைக்கப்பட்டுள்ள கருங்கற்களாலான நடைபாதை மற்றும் இயற்கைச் சூழலுடன் இணைந்தவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள பதாநகர்கள் அனைவரது மனங்களையும் கவருவதாக அமைந்துள்ளன. கி.மு. 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிக்குகளின் கற்குகைகளும் இங்கு காணப்படுகின்றன.
அநுராதபுர மகாவிகாரைக் கருத்திட்டத்தின் கீழ், 2016 ஆம் ஆண்டில் மத்திய கலாசார நிதியத்தினால் இப்பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை சார்ந்த இடங்கள் தொடர்பாக முகாமைத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கட்டிடக் கலைகளை எடுத்துக் காட்டும் கட்டிடச் சிதைவுகளைப் பேணிப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல்கள், அவர்களுக்கான வசதிகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.