யாப்பஹுவ
per person
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள யாப்பஹுவ என்னும் பிரதேசம் இயற்கை அழகு மிகுந்த ஒரு மலைப்பிரதேசமாகும். இது தொல்பொருளியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரதான நகரமாகும். யாப்பஹுவ மலையின் கிழக்குப் பகுதி மலைச்சாரலில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருளியல் ஆய்வுகளின் போது (இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முன்னர்) ஆரம்ப வரலாற்றுக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் சான்றுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் யாப்பஹுவ மலையில் பௌத்த ஆச்சிரமங்கள் அமைந்திருந்தமைக்கான சான்றுகளும் காணப்படுகின்றன. மலையைச் சுற்றிவர உள்ள மலைச்சாரல்களில் கட்டாரம் எனப்படும் நீர் வழிந்தோடும் நுழைவாயில்கள் அமைக்கப்பட்ட கற்குகைகள் அமைந்திருப்பதும், அதனுள் காணப்படும் பிராஹ்மி எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. கி.பி. 1215 ஆம் ஆண்டில் காலிங்க மாக என்னும் அரசன் யாப்பஹுவ பிரதேசத்தை ஆக்கிரமித்த காலகட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டமாகக் கருதப்படுகின்றது. இப்பிரதேசம் பாதுகாப்பு மிகுந்த பிரதேசமாகக் காணப்படுவதனால் முதலாம் புவனேகபாகு மன்னன் (கி.பி. 1272-1284) இந்தப் பிரதேசத்தை ஒரு கோட்டையாக மாற்றி நாட்டின் நான்காவது இராசதானியாக அமைத்தான். இதன் பிரகாரம் ஒரு கோட்டைக்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து அம்சங்களும் நிறைந்த பலம் வாய்ந்த நகரமாக இருந்ததற்கான தொல்பொருளியல் சான்றுகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்கு அமைக்கப்பட்டிருந்த திறந்த மண்டபம் மிகச் சிறந்த கலையம்சங்கள் பொருந்தியதும், அழகிய படிக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுமான சிறந்த கட்டிடமாகக் கருதப்படுகின்றது. மலைச்சாரலின் மீது கற்பாறைகள் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள படிக்கட்டுக்கள் முடிவடையும் இடத்தில் கற்களினாலான செதுக்குவேலைப்பாடுகளுடன் கூடிய, தலதா மாளிகை போன்ற அழகியதொரு திறந்த மண்டபம் காணப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வடமேல் மாகாண கலாச்சார முக்கோணத் திட்டத்தின் கீழ் மத்திய கலாசார நிதியத்தினால் யாப்பஹுவ நகரில் தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சிகளும், மரபுரிமை முகாமைத்துவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் யாப்பஹுவ பிரதேசத்தில் காணப்படும் மரபுரிமை சார்ந்த இடங்களில் தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சிகள், கட்டிடக்கலை அம்சங்களைப் பேணிப் பாதுகாத்தல், சுவரோவியங்களைப் பேணிப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.